இராமேஸ்வரம் - தேசிய புண்ணியஸ்தலம்

0

ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரம்
ராமாயணத்தில் முக்கிய இடம் பெறும் திருத்தலம், ராமேஸ்வரம்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரே ஜோதிர்லிங்க ஸ்தலமான இது, மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய முப்பெருமை உடையது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானசுவாமிகள் ஆகிய நான்கு பெரிய தமிழ் ஞானிகளால் பாடப்பெற்ற சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு.
ராமாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையிலிருக்கும் சங்கு போன்ற வடிவத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர்.

காசிக்கு நிகரானது :

தேசியப் புண்ணியஸ்தலமாக உள்ள ராமேஸ்வரம், காசிக்கு நிகராகப் புகழ்பெற்று விளங்குகிறது. காசியில் தொடங்கப்பட்ட யாத்திரை ராமேஸ்வரத்தில்தான் நிறைவு பெறுகிறது.
இங்கு மகோததி எனப்படும் வங்காள விரிகுடாவும் ரத்தினாகரம் எனப்படும் இந்துமாக்கடலும் கூடும் தனுஷ்கோடியில் யாத்ரீகர்கள் முழுக்கு போடும்போதுதான் காசி யாத்திரை பூர்த்தியாகிறது.
இங்குள்ள தீர்த்தங்கள் மானிடப் பிறவியின் பாவச் சுமையைக் கரைக்கின்றன; தோஷங்களைப் போக்குகின்றன என்பது நம்பிக்கை. ராவண சம்ஹாரம் முடிந்ததும் அவனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமர் இங்கே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேளை குறித்த ராமர், கைலாயத்தில் இருந்து லிங்கம் கொண்டு வர அனுமனைப் பணித்தார். அவர் வர தாமதமானதால் கடல் மணலில் சீதை செய்த லிங்கத்தை வழிபட்டார் ராமர். தாமதமாக வந்த அனுமன் கோபம் கொண்டு மணல் லிங்கத்தை அகற்ற முயன்றும் அது முடியவில்லை. அனுமனை ஆறுதல் படுத்துவதற்காக அவர் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதலில் பூஜை செய்ய வேண்டும் என ராமர் ஆணையிட்டார் என்கிறது புராணம்.
வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அமைப்பும், அடுக்கடுக்கான பிரகாரங்களும் திராவிடக் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுபவையாக உள்ளன.

மாபெரும் மூன்றாம் பிரகாரம்

இக்கோயிலில் 1212 தூண்களும் 2250 அடி சுற்றளவும் கொண்ட மூன்றாம் பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது என்ற பெருமைக்குரியது.
ராமாயண காலத்திலேயே தோன்றியுள்ள இக்கோயில்
12-ம் நூற்றாண்டு வரை கூரைக் கொட்டகையாக இருந்தது.
கி.பி. 12-ம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிமபாகு இத்திருக்கோயிலின் கர்ப்பக்கிரகத்தைக் கட்டியுள்ளார். பின்னர் இக்கோயிலில் திருப்பணி செய்தவர்களில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
1904-ல் தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். குடும்பத்தினர் திருப்பணி நிதி திரட்டி 9 நிலைகளுடைய கிழக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தனர்.
பல நூற்றாண்டுகளாகக் கட்டி முடிக்கப்படாமல் இருந்த வடக்கு, தெற்கு ராஜகோபுரங்களை ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் 5 நிலைகளுடன் கட்டி முடிக்க காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்வந்தார். தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஒருமுறை கூறியது போல், ஆன்மிக உயர்வுக்கான அருள் கிரகணங்களை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தொடர்ந்து பொழிந்து வருகிறது.

கோயில் தீவு:

கோயில் தீவு என்று கூறத்தக்க வகையில் ராமேஸ்வரம் தீவு முழுவதும் கோயில்களாகக் காணப்படுகின்றன.
"ராமர் பாதம்' உள்ள கந்தமாதன பர்வதம், கோதண்டராமசுவாமி கோயில், ஜடாயு தீர்த்தம், சாட்சி அனுமன் கோயில், ஐந்து முக அனுமன் கோயில் (இங்கு இலங்கைக்குப் பாலம் கட்டப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மிதக்கும் கற்களைக் காணலாம்.), பத்ரகாளியம்மன் கோயில், நம்புநாயகி அம்மன் கோயில், வில்லுண்டித் தீர்த்தம் ஆகியவை அவை.
தனுஷ்கோடி: ராமேஸ்வரம் தீவின் தெற்குக் கோடி முனையான தனுஷ்கோடி ஓர் அழிந்த சிறு நகரம். ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி 1964-ல் அடித்த புயலில் காணாமல் போனது. முன்பிருந்த ரயில் நிலையம், சர்ச், கோயில் போன்றவற்றின் மிச்சங்கள் ஒரு வரலாற்று சோகத்தின் மெüன சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன.
இந்திரா காந்தி பாலம்: பாம்பன் பாலம் என்று அழைக்கப்படும் இந்த 2.2 கி.மீ. பாலம் இந்தியாவிலே மிக நீளமானது. ராமேஸ்வரம் தீவைப் பிரதான நிலப் பரப்புடன் இணைக்கிறது. கடலுக்கு மேல் பயணிக்கும் அற்புதமான அனுபவத்தைத் தருகிறது இப்பாலம். (இரவில் இப்பாலத்தில் விளக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்குப் புண்ணியமாப் போகும்!) இதன்அருகில் பெரிய படகுகள் செல்ல அனுமதிக்கும் திறப்புடன் கூடிய ரயில்வே பாலமும் பார்த்து ரசிக்கத்தக்கது.

பாவம் போக்கும் தீர்த்தங்கள்

அமைவிடம்: மதுரையில் இருந்து 164 கி.மீ. தொலைவில் உள்ள, 13,224.22 ஏக்கர் பரப்பளவுள்ள சிறுதீவு ராமேஸ்வரம்.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை (பிற்பகல் 1 முதல் மாலை 3 மணி வரை தவிர) நடை திறந்திருக்கும். நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
தீர்த்தங்கள்: ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே அக்னிதீர்த்தம், தேவிபட்டிணம் (நவபாஷாணம்), திருப்புல்லாணி (தர்ப்பசயனம்), மண்டபம், பாம்பன், தங்கச்சி மடம் போன்ற இடங்களில் உள்ள 31 தீர்த்தங்களும் பாவம் போக்கும் மகிமை பெற்றவை.
விழாக்கள்: பிப்ரவரி - மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி, மே - ஜூன் மாதங்களில் ராமலிங்கப் பிரதிஷ்டை விழா, ஜூலை - ஆகஸ்ட்டில் ஆடித் திருக்கல்யாண விழா, செப்டம்பர் - அக்டோபரில் நவராத்திரி விழா ஆகியவை ராமேசுவரம் கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும்.
போக்குவரத்து வசதி: சென்னை, மதுரையில் இருந்து ரயில் வசதி, மதுரையில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கோயிலுக்கு பேருந்து உள்ளது.
தங்குமிட வசதி: ராமேஸ்வரத்தில் புனித யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்கும் இட வசதிக்குப் பஞ்சமில்லை. திருக்கோயிலைச் சார்ந்த பங்களாக்கள், குடில்கள், தங்கும் விடுதிகள் மொத்தம் 15 உள்ளன. குளிர்பதன வசதியும் உண்டு. (வாடகைக் கட்டணம் ரூ. 50 முதல் ரூ. 600 வரை.) இதுதவிர ஹோட்டல் தமிழ்நாடு மற்றும் தனியார் விடுதிகள் உள்ளன.
தொடர்புக்கு: அறநிலையத் துறை அலுவலகத் தொலைபேசி எண் - 04573 } 21223.
சேதுபதி மண்ணில்... ராமநாதபுரம்: முகவைப் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்களின் தலைமையகமான ராமநாதபுரத்தில் இன்றளவும் கம்பீரமாக நிற்கும் "ராமலிங்க விலாசம்' அரண்மனை அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம். இங்கு இயற்கை வண்ணங்கள் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்றும் புதுப் பொலிவுடன் காணப்படுவது வியப்புக்குரியது.
தேவிபட்டிணம்: இங்கு நவக்கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது கற்களை ராமர் ஸ்தாபித்துள்ளார். மகிஷாசூரனை வதம் செய்த தேவியின் கோயிலும் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இக்கடற்கரை ஊர் உள்ளது.
திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்விய தேசங்களுள் ஒன்று.
சேதுக்கரை: ராமேஸ்வரத்தில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயில் உள்ளது.
உத்திரகோசமங்கை: ராமேஸ்வரத்தில் இருந்து 72 கி.மீ. உள்ளது. இக் கோயிலில் உள்ள நடராஜர் சிலை, மரகதத்தில் வடிக்கப்பட்டுள்து. இங்கு ஆருத்ரா தரிசன விழா மிகச் சிறப்பானது.
ஏர்வாடி தர்கா: ஏர்வாடியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் சையத் அவுலியா தர்கா 800 ஆண்டுகாலப் பெருமை வாய்ந்தது. இப்புண்ணிய பூமி மனநலம் கொடுக்கும் மகத்தான சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிப். - மார்ச் மாதங்களில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா பிரசித்தமானது.
காஞ்சிரங்குளம்: ராமேஸ்வரத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள இது நீர்ப் பறவைகள் சரணாலயமாகும். பறவைகளைப் பார்வையிட நவம்பர் - பிப்ரவரி சீசன் காலத்தில் செல்வது நல்லது.
 

*நன்றி - தினமணி